×

கும்பகோணம் அருகே கூடுதல் மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ பறிமுதல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கூடுதல் மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆட்டோ உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கும்பகோணம் அருகே பாபநாசம் கடைவீதியில் கடந்த சில மாதங்களாக தினந்தோறும் ஒரே நேரத்தில் செல்லும் 3 தனியார் பஸ்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போட்டி போட்டு செல்வதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை ஆய்வு மேற்கொண்ட வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போட்டி போட்டு பயணத்தில் இருந்த பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 3 தனியார் பஸ்களை மடக்கி பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினார்.

தொடர்ந்து அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி சென்ற சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, அந்த வாகனத்திற்குரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கியது தெரியவந்ததை தொடர்ந்து அந்த வாகனத்தை சிறை பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நிறுத்தினார். மேலும் அந்த வாகனத்திற்கு நிலுவையில் உள்ள வரி ரூ.75 ஆயிரம் மற்றும் அதிகாரம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கியதற்காக அபராதம் ரூ.46 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரம் வரி மற்றும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதேபோல் நேற்று மாவட்ட நுகர்வோர் அமைப்பு சார்பில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்த புகாரின் பேரில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகளை ஏற்று செல்லும் ஆட்டோ மற்றும் மினி வேன் குறித்து ஆய்வு நடத்தியதில் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை விட கூடுதலாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்து திருப்பனந்தாள் போலீசில் ஒப்படைத்தார். மேலும் ஆட்டோ உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்றதோடு, உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட வேனை சிறைபிடித்து கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நிறுத்தினார். மேலும் இந்த வேனுக்கு நிலுவையில் உள்ள வரி மற்றும் அபராதம் சேர்த்து ரூ.66 ஆயிரம் வசூல் செய்ய உத்தரவிட்டார்.


Tags : Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...