வினாடி வினா போட்டி மாவட்ட அளவில் செரளபட்டி பள்ளி முதலிடம்

விராலிமலை: மாவட்ட அளவில் நடைபெற்ற வினாடி வினா - போட்டியில் விராலிமலை அருகே உள்ள செரளபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. இலக்கிய மன்ற போட்டி, சிறார் திரைப்படப் போட்டி, வினாடி வினா போட்டி என 6ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது. இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும் அடுத்து வட்டார அளவிலும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படும். இறுதியாக மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டியில் இரு மாணவர்கள் அதாவது ஒரு மாணவர் ஒரு மாணவி என்பது ஒரு குழு ஆகும். பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் செரளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் ஒன்றிய அளவில் நடந்த வினாடி வினா போட்டியில் செரளபட்டி பள்ளி மாணவர்களே வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை ராணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் என 52 குழுக்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட செரளப்பட்டி பள்ளி மாணவர்கள் ராகுல், (8ம் வகுப்பு), ராஜ ஹரிணி (7ம் வகுப்பு) குழுவானது மாவட்டத்தில் முதலிடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் சௌந்தரராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர். தொடர்ந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கெடுக்க மாவட்ட அளவில் வெற்றிபெற்ற செரளப்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்ற குழுவில் ஒரு மாணவியான ராஜ ஹரிணி ஏற்கனவே நடைபெற்ற கலை திருவிழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் கலையரசி என்ற பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: