கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை சாலையில் அடிக்கடி குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் கலந்து செல்வது குறித்து கண்காணித்து அதனை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் இருந்து தாந்தோணிமலைக்கு பிரதான சாலை உள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் இந்த பகுதியில் உள்ளன. அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் இந்த பகுதிச் சாலையோரம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில்,தாந்தோணிமலையில் இருந்து சுங்ககேட் செல்லும் பிரதான சாலையோரம் சிவசக்தி நகர் ஐந்து கிராஸ் பகுதிகள் உள்ளன. இதில், 2வது கிராஸ் பகுதியில் இருந்து குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, நேற்று காலை முதல் மாலை வரை தண்ணீர் சாலையில் கலந்து வீணானது.சாலையோரம் கசிவின் காரணமாக தண்ணீர் பரவி சென்றதால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தனர்.