×

சென்னை மாநகராட்சி பகுதியில் நடமாடும் இதய பரிசோதனை மைய பேருந்து அறிமுகம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதய நோய் தொடர்பான பரிசோதனை செய்ய  நடமாடும் இதய பரிசோதனை மைய பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இதய நோய் தொடர்பான பரிசோதனைகளை செய்ய ஏதுவாக சென்னை, மெட்ராஸ் ஆதித்யா ரோட்டரி கிளப் மற்றும் போரூர், ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான குளிர்சாதன வசதியுடன் கூடிய நடமாடும் இதய பரிசோதனை மைய பேருந்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்தில் முழுமையாக குளிர்சாதன வசதியுடன் 2 டிஜிட்டல் இ.சி.ஜி. , 2 எக்கோ இயந்திரங்கள் மற்றும் தானியங்கி ரத்த மாதிரி கருவிகள் உள்ளன. இந்த பேருந்து மூலம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட நகர்ப்புற சுகாதார மையங்களில் முகாம்கள் மூலமாக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதய நோய் தொடர்பான பரிசோதனைகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தொழில் முறை இதய நிபுணர், ஆய்வக நுட்புநர் கொண்டு நடத்தப்படும்.

பரிசோதனையின் போது மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவனைக்கோ அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுவார்கள். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் தங்கள் இல்லங்களின் அருகில் நடைபெறும் போது, மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவன சங்க நிர்வாகிகள் உள்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mobile Cardiac ,Examination Center ,Bus ,Chennai ,Municipal ,Corporation ,Minister ,K.N. Nehru ,
× RELATED வடசேரி பஸ் நிலையத்தில் நீர் கசிவு ஆறாக ஓடிய தண்ணீர்