×

திருவள்ளூரிலிருந்து வைத்திய வீரராகவர் கோயில் குளத்திற்கு ₹25 கோடி மதிப்பீட்டில் தண்ணீர் கொண்டுவரும் திட்டம்:  சோதனை ஓட்டம் வெற்றி  நீர் ஆதாரம் பெருகும் என தகவல்


திருவள்ளூர், மார்ச் 9: திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெரும்புதூரில் இருந்து வைத்திய வீரராகவர்  கோயில் குளத்திற்கு ₹25 கோடி மதிப்பீட்டில் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தின் சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளது. இதனால் அப்பகுதியின் நீர் ஆதாரம் பெருகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் குளம், கிட்டத்தட்ட 9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 9 மூளைகள் கொண்ட இந்த குளம்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோயில் குளம் கடந்த 2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குளமாகவும் மற்ற இடம் காலியாகவும் இருந்தது. இதில் அமாவாசை தினத்தில் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் மாறிப் போயிருந்தது.   

இந்நிலையில் கடந்த 2015-ல் பெய்த மழை காரணமாக திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஏரி நிரம்பியதால் அதன் உபரி நீர் வீரராகவர் கோயிலுக்கு திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏரி முழுவதும் நீர் நிரம்பி காணப்படுகிறது.  மேலும் மாசுபடாமல் இருக்க நீரை மறு சுழற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் தற்போது இருக்கும் நீரை அகற்றிவிட்டு புதிய நீரை சேமித்து வைக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வீரராகவர் கோயில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம்  தெரிவிக்கப்பட்டது.  

இதனையடுத்து  கோயில் குளத்தில் எந்நாளும் நீர் இருக்க வேண்டும் என்பதற்காக நபார்டு திட்டத்தின் கீழ், நீர்வளத்துறை சார்பில், ₹25 கோடி மதிப்பீட்டில் கடந்த 2015ல்  திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் அணைக்கட்டு பகுதியிலிருந்து திருவள்ளூர் வீரராகவர் கோயில் வரை 13 கி.மீட்டர் தூரத்திற்கு பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் வேகமாக நடந்தன. அதற்காக சிறு மதகுகள் மற்றும் டேங்க் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 13 கி.மீட்டர் தூரத்திற்கும் பைப் லைன் அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது நிறைவு பெற்றது. இதனால் பட்டரைப்பெரும்புதூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் பட்சத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் லிட்டர் வந்து சேரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.  

இந்நிலையில் 13 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட இந்த பைப் லைனில் விரிசல் விழுந்து கசிவு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக சோதனை ஓட்டம் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 2.45 மணி திறக்கப்பட்ட நீரானது ஒரு மணி நேரத்தில் 13 கி.மீட்டர் தூரம் கடந்து வீரராகவர் கோயில் குளத்தை நீர் வந்தடைந்தது. இதனை திருவள்ளுர் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்தியநாராயணன், உதவி பொறியாளர் லோகரட்சகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது 13 கி.மீட்டர் தூரத்திலும் கசிவோ, அடைப்போ எதுவும் இல்லாததால் இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த திட்டத்தினை முறைப்படி தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார். அதன் பிறகு ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த திட்டம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு தண்ணீர் தேவைப்படும் போது திறந்துவிடும் பணிகளையும் கோயில் நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் கோயில் குளத்தில் 2.5 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைப்பதால் அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற புனித நீராடவும், தெப்பத் திருவிழாவின் போது குளத்தில் முழுமையாக நீரை நிரப்பவும் செய்யலாம். இவ்வாறு சேமித்து வைக்கும் நீரால் திருவள்ளூர் நகரில் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் கணிசமாக உயர வாய்ப்பிருப்பதாகவும், பட்டரைப் பெரும்புதூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றிலிருந்து நீரை வெளியேற்றுவதால் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் உள்ள விவசாய கிணறுகளிலும் நீராதாரம் பெருகும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tiruvallur ,Vaidhya Veeraragavar Temple Pond ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...