மாமல்லபுரம், மார்ச். 9: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசித்தனர். சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டைபாறை, அர்ஜுணன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோயில் உள்பட புராதன சின்னங்களை நேற்று ஒருநாள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மாமல்லபுரம் புராதன சின்னங்களை மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். குறிப்பிட்ட நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில், மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க உள்நாட்டு பயணிகளுக்கு ₹40, வெளிநாட்டு பயணிகளுக்கு ₹600 கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.