×

உத்திரமேரூர் மனுநீதிநாள் முகாமில் ₹4.36 கோடியில் நலத்திட்ட உதவிகள்

உத்திரமேரூர், மார்ச் 9: உத்திரமேரூர் மனுநீதி நாள் முகாமில், 333 பயனாளிகளுக்கு ₹4.36 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணை பெருந்தலைவர் வசந்திகுமார், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், பத்மாபாபு, பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டநாவல் ஊராட்சி மன்ற தலைவர் அமுதாதமிழ்வேந்தன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, 333 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.  இதில், முதியோர் உதவித்தொகை 17 நபர்களுக்கும், வேளாண்துறை பயனாளிகள் 25 பேருக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா  192 நபர்களுக்கும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில்  20 பேருக்கும், மகளிர் சுயஉதவி குழு கடன் உதவி, இலவச தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு பயிர்கடன்கள், தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை என மொத்தம்  333 பயனாளிகளுக்கு மொத்தம் ₹4 கோடியே 36 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மனுநீதி நாள் முகாமினையொட்டி சுகாதார துறை, கால்நடைத்துறை வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை ரீதியாக அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவது குறித்தும் விளக்கி கூறினர். மேலும், இந்நிகழ்ச்சியையொட்டி தோட்டநாவல் கிராமத்தில் நீர்நிலை அருகே பலன் தரும் மர கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தோட்டநாவல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், லோகநாதன், வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கிராமமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Uttaramerur Manu Nithinal Camp ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...