×

புவனகிரி அருகே பரபரப்பு சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதல்

புவனகிரி, மார்ச் 8: புவனகிரி அருகே சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை ஏற்றி வந்த ஆம்புலன்சையும் வழிமறித்து தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது.
மாசி மக திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் இருந்து கிள்ளையில் நடந்த தீர்த்தவாரிக்கு அம்மனை எடுத்து சென்று சாத்தப்பாடி கிராமத்துக்கு பக்தர்கள் திரும்பினர். புவனகிரி அருகே உள்ள மேலமணக்குடி கிராமம் வரும்போது சாத்தப்பாடியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், மேலமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது தகராறாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கலியன், அஜய் உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்தனர்.

ஆத்திரமடைந்த மேலமணக்குடி கிராம மக்கள், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர். இதற்கிடையே மோதலில் காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது ஆம்புலன்சை வழிமறித்த ஒரு கும்பல், ஆம்புலன்ஸ் ஊழியர் தடுத்தும், அதையும் மீறி ஆம்புலன்சுக்குள் ஏறி சென்று சிகிச்சைக்காக சென்றவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இது குறித்து ஜெயந்தி என்பவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் எதிர்தரப்பினர் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுவன் அளித்த புகாரின்பேரில் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சுபாஷ் (23), ராக்கி (எ) குமரேசன் (26), சஞ்சய் (22), அபிமணி (18), சந்துரு (20) மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிவலிங்கம் என்கிற ராஜசேகர் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Swami ,procession ,Bhubaneswar ,
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்