×

‘கலைவாணர் மாளிகை’ நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் புதிய திட்ட பணிகளின் மாதிரியை பார்வையிட்டார்

நாகர்கோவில், மார்ச் 8: நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதியதாக ₹10.50 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடமான கலைவாணர் மாளிகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவிலில் நடைபெற்ற தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதனை தொடர்ந்து நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். நேற்று காலையில் 9.30 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து முதலமைச்சர் புறப்பட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் வருகை தந்தார்.

அங்கு அவரை குமரி மாவட்ட கலெக்டர் தர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சிக்கு ₹10.50 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்துக்கான கல்வெட்டை பட்டன் அழுத்தி திறந்து வைத்தார். பின்னர் ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.  அங்கு நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடம் தொடர்பான வீடியோ காட்சியையும் அவர் பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி புதிய கட்டிட மாதிரியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தின் மாதிரி, வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலைய மாதிரி போன்றவற்றையும் பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் அது தொடர்பாக முதல்வருக்கு விளக்கினார்.

மேலும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் அமைய உள்ள ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பூங்காவின் மாதிரி படம்,  மாநகராட்சி திட்ட பணிகள் தொடர்பான வீடியோ காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் ராம்சர் நில பகுதிகள் தொடர்பாக காட்சிகளை பார்வையிட்டார். பின்னர் மன்ற கூட்ட அரங்கு உட்பட மாநகராட்சி கட்டிட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.  பின்னர்  மாமன்ற உறுப்பினர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். முதல்வருடன் மேயர் மகேஷ், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ், விஜய்வசந்த் எம்.பி, ராஜேஷ்குமார், கலெக்டர் தர், ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோரும், மாமன்ற உறுப்பினர்களும் அமர்ந்திருந்தனர்.

பின்னர் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலக பணியாளர்கள் முதல்வருக்கு புத்தகங்கள் வழங்கினர். எம்எல்ஏ பிரின்ஸ், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜாண் லூயிஸ், பத்மநாபபுரம் சப் கலெக்டர் கவுசிக், கூடுதல் ஆட்சியர் குணால் யாதவ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தொடர்ந்து முதல்வர் அங்கிருந்த வருகை பதிவேட்டில் ‘வாழ்த்துகள்’ என்று எழுதி முதல் கையெழுத்திட்டார். பின்னர் மேயர் அறைக்கு சென்று மேயர் மகேசை அவரது இருக்கையில் அமர வைத்து அருகே நின்றவாறு முதல்வர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடிய முதல்வர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு, வெளியே வந்தபோது கட்சியினரை காரில் இருந்தபடியே செல்பி எடுத்து கொள்ள அனுமதித்தார்.
n தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்ற பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
n டதி மகளிர் பள்ளி அருகே நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவ, மாணவிகள் முதல்வரை பார்க்க நின்றிருந்தனர். அவர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். விடைபெற்றபோது குழந்தைகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
n வரும் வழியில் இரு பக்கமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று வரவேற்றனர்.

56,809 சதுர அடி கட்டிடம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய அலுவலகக் கட்டிடமான ‘கலைவாணர் மாளிகை’, கீழ்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் மொத்தம் 56,809 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை இடம்பெற்றுள்ளது. முதல் தளத்தில் மேயர் அறை, துணை மேயர் அறை, நிர்வாக பிரிவு, தகவல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவு, தாய்மார்கள் பாலுட்டும் அறை, பார்வையாளர் அறை, உணவு அருந்தும் அறை, வரவேற்பறை, வரி வசூல் மையம் ஆகியவை உள்ளது. இரண்டாவது தளத்தில் ஆணையாளர் அறை, மாநகர பொறியாளர் அறை, பொறியியல் பிரிவு, விழா மண்டபம், கலந்தாய்வு அரங்கம், காணொளி காட்சி அறை ஆகியவையும், மூன்றாவது தளத்தில் மாமன்ற கூட்ட அரங்கம், நகர திட்டமிடுநர் அறை, மாநகர் நல அலுவலர் அறை, நகரமைப்புப் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு, நகரசார் அளவர் அறை ஆகியவையும், நான்காவது தளத்தில் பத்திரிக்கையாளர் அறை, வருவாய் பிரிவு, பதிவறை ஆகியவையும் அமைந்துள்ளது. இவ்வலுவலகக் கட்டிடத்தில், தீயணைப்பு வசதிகள், கண்காணிப்பு  கேமர வசதிகள், இரண்டு மின் தூக்கிகள், குளிர்சாதன வசதி மற்றும் உயர்கூரை அமைப்புடன் கூடிய மாமன்ற அரங்கம், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Nagercoil 'Kalaivanar Majali ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து