முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவண்ணாமலை, மார்ச் 8: 4 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 73 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார்(73), திருமணமானவர். கடந்த 4.5.2020 அன்று, அருகிலுள்ள ஒரு பகுதியில் வீட்டுக்கு வெளியே 4 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்ற சுகுமார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, அழுதபடியே சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, ஆரணி மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவ பரிசோதனையில், சிறுமியிடம் முதியவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் சுகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் சுகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹1000 அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து, சுகுமாரை போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: