×

தென்மாவட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் நலவாரிய குழு ஆய்வு

நெல்லை:  செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட ரயில் நிலையங்களில் இந்திய ரயில்வே பயணிகள் அடிப்படை வசதி நலவாரிய குழுவினர் 3 நாள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்திய ரயில்வே பயணிகள் அடிப்படை வசதி நலவாரிய குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், கர்நாடகாவைச் சேர்ந்த மதுசூதனா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபிஜித் தாஸ், தெலுங்கானாவைச் சேர்ந்த உமா ராணி, ஜார்க்கண்டைச் சேர்ந்த ராம்குமார் பகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் தென் மாவட்டங்களில் 3 நாள் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டனர். அதன்படி மதுரை கோட்டத்தில் இடம் பெற்ற விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், செங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டர்.

2வது நாளான நேற்று தென்காசி ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே பயணிகள் அடிப்படை வசதி நலவாரிய குழுவினர்  ஆய்வு மேற்கொண்டனர். செங்கோட்டை:  இதைத் தொடர்ந்து செங்கோட்டை ரயில் நிலையத்திலும் ஆய்வு நடத்திய ரயில்வே பயணிகள் அடிப்படை வசதி நலவாரிய குழுவினர்   குறிப்பாக ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர், நடைமேடை, குடிநீர் வசதி, பயணிகள் இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை நேரடியாகப் பார்வையிட்டு குறைகள், கோரிக்கைகளை அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தனர். அப்போது ரயில் நிலைய அதிகாரிகள், பயணிகள்,  பயணிகள் பாதுகாப்பு நலச்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  தொடர்ந்து 3வது நாளான இன்று சாத்தூர், திருமங்கலம், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

விரைவில் குறைகள் நிவர்த்தி தென்காசி ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்திய பிறகு குழுவின் உறுப்பினர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘தென் மாவட்ட   ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான நடைமேடை, குடிதண்ணீர், கழிப்பிட வசதி,  மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நல்ல முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக வருகை தந்தோம்.  தென்காசி ரயில் நிலையத்தில் பெரும்பாலான பயணிகள் ரயில் 2வது நடைமேடையில் வருவதாகவும் இதனால் முதியோர்களும் குழந்தைகளும் நடைமேடை மேம்பாலத்தின் வழியாக செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், ரயில் வரும் சமயம் தவிர மற்ற நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லை என்பதையும்,  லிப்ட் வசதி வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டோம்.

செங்கோட்டை ஆய்வின்போது குருவாயூரில் இருந்து புனலூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டனர்.  சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி குறைவாக உள்ளது‌.  கழிப்பறைகளில் மின்விளக்கு வசதி சரிவர இல்லை.  நடைமேடையில் மின்விளக்குகளும் போதுமான அளவில் இல்லை. இரண்டாவது நடைமேடையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர இல்லை  என்பனவற்றை தெரிந்து கொண்டோம்.  இவை குறித்து எல்லாம் அடுத்து நடைபெறும் வாரிய கூட்டத்தில் தெரியப்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Tags : Passenger ,Committee ,Southern District Railway Stations ,
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...