ஓசூர் ராமநாயக்கன் ஏரியை மேம்படுத்தும் பணி மும்முரம்

ஓசூர்: ஓசூரில் ராமநாயக்கன் ஏரி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார். ஓசூர் மாநகராட்சியில் உள்ள ராமநாயக்கன் ஏரி பூங்காவில் உள்ள நடைபாதைகள் பராமரிப்பு பணிகள் குறித்தும், ஓசூர் ஐ.டி. பார்க், பத்தலப்பள்ளி அருகே 10ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் மற்றும் சர்வதேச மலர் ஏல மையத்தை, கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக, அவர் ராமநாயக்கன் ஏரி மற்றும் பூங்காக்கள் மாதிரி நகர திட்டத்தின் கீழ், ரூ.23 கோடியே 42 லட்சம் மதிப்பில் மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். பழைய பூங்காவின் நடைபாதை, யோகா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை ஆய்வு செய்து, நாள்தோறும் தூய்மை பணிகளை மேற்கொண்டு, நல்ல முறையில் பராமரிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து சென்னசந்திரம் ஊராட்சியில், எல்காட் நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் ஐடி பார்க் பணிகளையும், பத்தலப்பள்ளியில் 10 ஏக்கரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு, மாநகராட்சி பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், குளிர்பதனக் கிடங்குகளில் மலர்களை பாதுகாத்து, சிலவாரங்கள் நீடிக்கும் வண்ணம், கட்டுமான வசதி அமைப்புகள் செய்துள்ளதையும், மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் கூடத்தையும் அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா,  வருவாய் அலுவலர் சிப்காட் பாலாஜி, மாநகராட்சி சுகாதார அலுவலர் அஜிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணாமூர்த்தி, வேளாண் வணிக விற்பணை இயக்குநர் காளிமுத்து, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், தாசில்தார் சுப்பிரமணி, உதவி பொறியாளர் வெங்கடராமன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

Related Stories: