×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் எட்டி சாதனை

கிருஷ்ணகிரி, மார்ச் 8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் மின் இணைப்புடன், ஆதார் இணைக்கப்பட்டு விட்டதாக மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோரின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கியது. இப்பணிக்காக தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பில் சுணக்கம் காட்டி வந்தனர்.

இதையடுத்து, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை மின் வாரியம் காலக்கெடுவை நீடித்தது. அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்தது. பின்னர், பிப்ரவரி மாதம் 28ம் தேதி என மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. அதன் பின் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என அரசு அறிவித்தது. மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது. மேலும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், மின் கட்டணம் செலுத்துவதற்கான இணைய தளத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு வசதியும் செய்யப்பட்டிருந்தது. ஆதார் கார்டு, மக்களின் அடையாளமாக மாறியுள்ளது. மேலும், அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளை தடுக்கவும், ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 71 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்து 92 ஆயிரத்து 463 வீட்டு மின் இணைப்புகள், வர்த்தக நிறுவனகளின் மின் இணைப்புகளும், 120 கைத்தறி மின் இணைப்புகளும், 988 விசைத்தறி மின் இணைப்புகளும், 71 ஆயிரத்து 961 விவசாய மின் இணைப்புகளும், 19 ஆயிரத்து 888 குடிசை பகுதி மின் இணைப்புகளும் என மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 420 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதியுடன், மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்து 100 சதவீதம் ஆதார் எண் இணைத்த மாவட்டமாக நிறைவு பெற்றுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 71 பிரிவு அலுவலகங்களில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. மின் பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று, சில இடங்களில் இணைத்துள்ளனர். சிலர் ஆதார் எண்ணை கொடுத்த மறுத்தனர். ஒரு சில இடங்களில் விவசாய மின் இணைப்புகளுக்கான பெட்டி மட்டும் இருக்கிறது. அதை எங்கு பயன்படுத்துகின்றனர் என்பது தெரியாமல் இருந்தது.

அவர்களையும் கண்டறிந்து ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அரசு நிர்ணயித்த தேதிக்குள் அனைத்து மின் இணைப்புகளும், ஆதார் எண் இணைக்கப்பட்டு 100 சதவீதம் பணி முடித்த மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதற்காக உழைத்த மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமின்றி, இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.

Tags : Krishnagiri district ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை