×

வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் தூண்கள் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்காக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன.  அந்த வகையில் வெம்பக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
செவல்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது.


இந்த தொட்டியின் நான்கு தூண்களிலும் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் சேதமடைந்தும் உள்ளன. இதனால் தொட்டி இடிந்து விடும் நிலையில் உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே குடியிருப்புகள் உள்ளன. தற்போது தொட்டி பலவீனமான நிலையில் உள்ளதால் பாதி கொள்ளளவே தண்ணீர் நிரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் சப்ளை செய்யப்படுவதில்லை. செவல்பட்டி பொதுமக்கள் கூறுகையில், ‘‘சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை முற்றிலுமாக இடித்து அகற்றி விட்டு, கூடுதல் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sewalpatti ,Vembakottai ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு