×

பழநி அருகே சரக்கு வாகனம் எரிந்து நாசம்

பழநி: பழநி அருகே கொக்கரக்கல் வலசு, ராஜாம்பட்டி கிராமங்களில் மானாவாரி நிலங்கள் அதிகளவு உள்ளன. இந்நிலங்களில் வெளியூரை சேர்ந்த நபர்கள் இரும்பு, காப்பர் உள்ளிட்ட பொருட்களை பிரிப்பதற்கு மின்சார வயர்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்படுகிறது. இந்த புகையை சுவாசிப்பதால் இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சுவாசநோய் ஏற்படுகிறது. இதனால் திறந்தவெளி இடங்களில் பொருட்களை எரிப்பதை இப்பகுதி மக்கள் தடுத்து வருகின்றனர். இதற்காக கண்காணிப்பு பணியும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கொக்கரக்கல் வலசு பகுதியில் உடுமலையை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரம் செய்யும் சிலர் மின்சார வயர்களை எரித்து கொண்டிருந்தனர். இதனால் கரும்புகை எழுந்துள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே மின்சார வயர்களை எரிக்கும் இடத்திற்கு வந்தனர். மக்கள் திரண்டு வருவதை கண்ட மின்சார வயர்களை எரித்தவர்கள், அதனை எரிந்து கொண்டிருக்கும் போதே சரக்கு வாகனத்தில் தூக்கி போட்டு தப்பிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் மின்சார வயர்களில் எரிந்து கொண்டிருந்த தீ, சரக்கு வாகனத்திலும் பற்றி எரிய துவங்கியது. சிறிது நேரத்தில் வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமானது. அதற்குள் மின்சார வயர்களை வயர்களை எரித்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த பாஸ்கரன் என்பவரை பிடித்து சாமிநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது