×

ஒரு ஆண்டுக்கு பிறகு நாகூர் வெட்டாற்று பாலம் போக்குவரத்திற்கு திறப்பு

நாகப்பட்டினம்: கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கு பின்னர் சீரமைப்பு செய்யப்பட்ட நாகூர் வெட்டாற்று பாலம் போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. நாகப்பட்டினம், நாகூர் இடையே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2008-2009ம் ஆண்டு நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை போடப்பட்டது. இதனால் வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து எளிதாக நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் எளிதாக சென்று வர முடியும். இந்நிலையில் நாகூர் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சேதம் அடைந்தது.  இதையடுத்து கடந்த 2022 ஏப்ரல் மாதம் இந்த பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.10.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து பாலம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் திருவாரூர் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இதையடுத்து பாலம் வழியாக பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  இதனால் நாகப்பட்டினம் நாகூர் மெயின் சாலை வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வந்தது. இதனால் தினந்தோறும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாலம் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து சேவை சங்கங்களும் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் பாலம் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வந்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று முன்தினம் இரவு முதல் வாகனங்கள் சென்று வர பாலம் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன், எம்எல்ஏ., முகம்மதுஷாநவாஸ் ஆகியோர் ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தனர். கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக நீடித்து வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

Tags : Nagor Overhead Bridge ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு