ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் 1 கோடி விவசாய தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகப்பட்டினம் ஒன்றிய செயலாளர் நீதிராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கார்க்கி, மாவட்ட தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சரபோஜி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

வேலை இழந்த விவசாய தொழிலாளர்களை பாதுகாத்திட அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைதிட்டத்தை தொடங்கிட வேண்டும். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கு கடந்த ஆண்டைவிட பாதியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி ஊதியத்தை ரூ.600 வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் வீடுகட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் பட்டியல் இன மக்களுக்கு வழங்குவது போல் ரூ.10 லட்சம் முழு மானியத்துடன் தொழில் கடன் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 1 கோடி விவசாய தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: