வீட்டிற்குள் முதியவர்களை பூட்டிய விவகாரம் தேனி சார்பு நீதிபதி நேரில் விசாரணை

தேனி: தேனியில் நடைபாதை பிரச்னையில் முதியவர்களை வீட்டிற்குள் வைத்து பாதையில்லாமல் மூடிய விவகாரம் தொடர்பாக நீதிபதி நேரில் வந்து விசாரணை நடத்தினார்.தேனி நகர் ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் குடியிருப்பவர் பெரியசாமி, பார்வதி தம்பதியர். இவர்கள் இளநீர் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது வீட்டினருகே குடியிருப்பவர் காமாட்சி. இவர் பருத்தி வியாபாரம் செய்து வருகிறார். இதில் பெரியசாமிக்கும், காமாட்சிக்குமிடையே நடைபாதை சம்பந்தமாக பிரச்சனை எழுந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தினை காமாட்சி அணுகியபோது, பெரியசாமி நீதிமன்ற விசாரணையில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஒருதரப்புக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பாதை பிரச்சனையில் உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நேற்று முன்தினம் காமாட்சி தனக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததாக கூறி பெரியசாமி, பார்வதி தம்பதியினர் வீட்டுக்கு முன்பாக அரையடி மட்டும் விட்டு பாதையை அடைத்துள்ளனர். இதனால் வீட்டிற்குள் இருந்த முதியவர்களால் வெளியே வரமுடியாத நிலை உருவானது. இது குறித்து தகவல் தேனி மாவட்ட இலவச சட்ட உதவிமைய ஆலோசகரும், தேனி சார்பு நீதிபதியுமான ராஜ்மோகனுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, நேற்று மாலை நீதிபதி ராஜ்மோகன் தேனியில் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாதபடி அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு நேரில் விசாரணை செய்ய வந்தார்.

இவருடன் வக்கீல்கள் பலர் வந்தனர். அப்போது பெரியசாமி, பார்வதி தம்பதியரை வெளியே வரவைத்து விசாரித்தார். மேலும் பாதையை மூடிய காமாட்சியிடமும் விசாரணை நடத்தினார்.

 இதனையடுத்து, இன்று(7ம்தேதி) தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையத்திற்கு முதியவர்கள் பெரியசாமி மற்றும் பார்வதி ஆகியோரை நேரில் வருமாறு கூறி நீதிபதி ராஜ்மோகன் புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: