(வேலூர்) வள்ளி- முருகன் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு வள்ளிமலையில் தேரோட்டம் நிறைவையொட்டி

பொன்னை, மார்ச் 7: வள்ளிமலை கோயிலில் தேரோட்டம் நிறைவு பெற்றதையொட்டி நேற்று நடந்த வள்ளி- முருகன் திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத வருடாந்திர பிரமோற்சவம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 2ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

தேரோட்டம் நிறைவடைந்ததையொட்டி, நேற்று வேத மந்திரங்கள் முழங்க வள்ளி- முருகன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, நேற்று அதிகாலை வேடர்பரி உற்சவம் நடைபெற்றது. பின்னர், வள்ளிகுல பழங்குடி இருளர் குலமரபினர்கள் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்வு நடந்தது. மேலும், தீர்த்தவாரி வசந்த உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் தர், மேல்பாடி எஸ்ஐக்கள் செல்வராஜ், ஆனந்த்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு ஆட்டுக்கிடா உற்சவம் நடைபெற உள்ளது.

Related Stories: