வௌிமாநில தொழிலாளர்கள் தொடர்பாக தவறான தகவல் பரப்புவோர் மீது கண்காணித்து கடும் நடவடிக்கை: கரூர் எஸ்பி எச்சரிக்கை

கரூர்: வௌிமாநில தொழிலாளர்கள் தொடர்பாக தவறான தகவல்களை சமூகவலைதளங்கள் மூலம் பரப்பும் நபர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம், வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்பட அனைத்து போலீசார்களும், வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவு வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று, அவர்களின் குறைகள் கேட்பதோடு, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதோடு, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அறிவுரை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில், அனைத்து போலீசார்களும், வெளிமாநில தொழிலாளர்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று, விழிப்புணர்வுகளை வழங்கினர்.

மேலும், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், பாதுகாப்பு தொடர்பான உடனடி உதவிக்கு, 9498100780 மற்றும் 04324-296299 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இந்தி தெரிந்த போலீசார், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் எனவும், வெளிமாநில தொழிலாளர்களிடம் இருந்து வரும் தகவல்களை பெற்று, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பாக தவறான தகவல்களை வாட்ஸ்அப், பேஷ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பும் நபர்களை கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.

Related Stories: