×

திருத்தணி பகுதியில் வடமாநில தொழிலாளர்களுடன் போலீசார் ஆலோசனை: பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருத்தணி: தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது. வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ள நிலையில், வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருத்தணி துணை சூப்பிரண்ட் விக்னேஷ் மேற்பார்வையில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வடமாநில தொழிலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர்.

அதன்படி பொன்பாடி பகுதியில் சைக்கிள் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம், முருக்கம்பட்டு, தாழவேடு பகுதிகளில் குடிசைமாற்று வாரியம் மூலம் கட்டப்படும் வரும் அடுக்குமாடி குடியிருப்புகள், கார்த்திகேயபுரம் காகித தொழிற்சாலை, பட்டாபிராமபுரம் கோல்டன் ரைஸ்மில் ஆகிய இடங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் 350க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இதில் போலீசார் கூறும்போது, வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வாட்ஸ்அப்பில் வெளியான வீடியோ உண்மையானதல்ல. அது பழைய வீடியோ. அதனை இப்போது வாட்ஸ்அப்பில் பரப்பி வருகின்றனர். அதுபற்றி அச்சப்பட வேண்டாம். வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம். தைரியமாக இங்கே பணி புரியலாம் என்றனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்ட், இன்ஸ்பெக்டர் ஆகியோர் காவல் நிலையத்தின் தொலைபேசி எண்களை வட மாநில தொழிலாளர்களிடம் வழங்கினர். எப்போது உதவி வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags : North State ,Tiruthani ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பலி