×

மாசிமக குல தெய்வ வழிபாடு மாமல்லபுரம் கடற்கரையில் இருளர்கள் ஆடி, பாடி கொண்டாட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் நடந்த மாசிமக குல தெய்வ வழிப்பாட்டில் இருளர்கள் ஆடி,பாடி கொண்டாடினர். ஜோடிகளுக்கான திருமணங்களுக்கு திருமண சான்றிதழ் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். உலக புகழ்பெற்ற கடற்கரை நகரமான கடல் மல்லை என்னும் மாமல்லபுரத்தில் மாசி மகத்தன்று இருளர் இன மக்கள் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பே பழங்குடி இருளர் இன மக்கள் மாமல்லபுரம் கடற்கரையில் தற்காலிக குடில்கள் அமைத்து, திருமணவிழாவுக்கான  முன்னேற்பாடுகளை செய்தனர்.

மேலும், மாசி மகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் கடற்கரையில் இருளர்கள் பாரம்பரிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என இரவு முழுவதும் கடற்கரையில் மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், நேற்று அதிகாலையிலேயே எழுந்து கடலில் குளித்து மணலில் செய்த கன்னியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை வழிபட்டனர். மாசிமகமான, நேற்று மகிழ்ச்சியான சுபநிகழ்ச்சிகள் செய்வது குறித்து கன்னியம்மனிடம் குறிகேட்டு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் காதுகுத்தல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்து மகிழ்ச்சியடைந்தனர்.

மாசிமக, திருவிழா அன்று கடலில் நீராடுவதால் 21 தலைமுறை பாவங்களும் நீங்கும். மாசிமக பவுர்ணமியன்று கடலில் நீராடுவதால் வருடத்தின் அனைத்து நாட்களும் நீராடிய காசி, ராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மாசிமகத்தை, முன்னிட்டு நேற்று மட்டும் 30 பழங்குடியின இருளர் ஜோடிகள் திருமணங்கள் நடந்தது. மேலும், இருளர் பழங்குடியின அமைப்பு, இருளர் பழங்குடியின கூட்டமைப்பு, தேசிய ஆதிவாசிகள் தோழமைக்கழகம், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 21 வயதிற்கு கீழ் உள்ள ஆண்-பெண் யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

* திருமண சான்றிதழ் வழங்க கோரிக்கை
இருளர் திருமணங்கள் குறித்து மாமல்லபுரத்தை சேர்ந்த இருளர் ஒருவர் கூறுகையில், ‘மாசிமகத்தன்று பழங்குடி இருளர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், காதுகுத்தல், மஞ்சள் நீராட்டு விழா, மொட்டை அடித்தல் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்கின்றனர். தலைமுறை, தலைமுறையாக ஆண்டுதோறும் கடற்கரையில் திருமணம் செய்கிறோம். ஆனால், திருமணம் செய்ததற்கான சான்றிதழை யாரும் வாங்கியதில்லை. எனவே, நேற்று நடந்த திருமணங்களுக்கும் சரி, இனி வரும் காலங்களில் செய்யும் திருமணமாக இருந்தாலும் சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் எப்படி திருமண சான்றிதழ் வழங்குகிறார்களோ அதேபோல் இவர்களுக்கும் அரசு பதிவு திருமணம் செய்ததற்கான சான்றிதழை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.

Tags : Maasimaha ,Ilurals ,Mamallapuram beach ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...