×

ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோயிலில் மாசிமக தேரோட்டம்

குன்னம்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோயிலில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
குன்னம் அருகே சு.ஆடுதுறை வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாலந்துறை, திருமாந்துறை, திருவட்டத்துறை என 7 துறைகள் உள்ளது. இதில் 3வது துறையாக சு.ஆடுதுறை  குற்றம் பொறுத்தவர் கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் மாசி மகம் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை பஞ்சமுர்த்திகளுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18 வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது.

அதைத் தொடர்ந்து பஞ்சமுர்த்திகள் மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெடி, மேள தாளங்கள், முழங்க திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் பக்தி கோஷத்துடன் பக்தி பாடல்கள் பாடியபடி தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். இந்த தேரோட்ட விழாவில் ஆடுதுறை, ஒகளுர், பெண்ணக்கோனம், அத்தியூர் கிராமங்களைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மங்களமேடு போலிசார் செய்து இருந்தனர்.

Tags : Masimagam ,Aduthurai crime temple ,
× RELATED இலங்கைத் தமிழர்களுக்கு 72...