காரைக்கால் பாரதியார் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்

காரைக்கால்: காரைக்கால் பாரதியார் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி எம்பியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவரும் காரைக்கால் சர்வ மத சகோதர சங்க தலைவர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால்-பேரளம் ரயில் பாதை இணைப்புத் திட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே காரைக்கால் பேரளம் ரயில் பாதையில் காரைக்காலில் புதிய பேருந்து நிலையம் அருகே பாரதியார் ரோடு சந்திப்பில் மிக அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இடத்தில் முறையாக ரயில்வே கேட் அமைக்கப்படுவதை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம். ரயில்வே கேட் அமையும் இடத்திற்கு அருகிலேயே 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் மேல்நிலைப்பள்ளி மற்றும் காரைக்கால் பேருந்து நிலையம் ஆகியவை முறையே 20 மீட்டர் மற்றும் 30 மீட்டர் தூரத்தில் இந்த வழித்தடத்திற்கு மிக அருகில் உள்ளன.

இந்த ரயில் கிராசிங்கில் மேனுவல்கேட் அமைத்தால் இருபுறமும் வாகனங்கள் அதிக அளவில் வரிசையாக நிற்கும் அவல நிலை உருவாகும். எனவே கனரக வாகனங்களை புறவழிச் சாலையில் திருப்பிவிட வேண்டும். தற்போது சாலையின் கிழக்குப் பகுதியில் ரயில் திட்ட களப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாலும், மேற்குப் பகுதியில் எந்தப் பணியும் இன்னும் தொடங்கப்படாததாலும், ரயில் கேட்டைத் தடுப்பது குறித்து முடிவெடுக்க இதுவே சரியான நேரம். அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறிப்பதற்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். மேலும், காரைக்காலில் இருந்து மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் போன்ற தென் நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகள் இல்லை. திருச்சிக்கு காலை நேரத்தில் விரைவு ரயில் சேவை மிகவும் அவசியம். எனவே இந்த கோரிக்கைகளை ரயில்வே அதிகாரிகளிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: