ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தில் ஒற்றை யானை அட்டகாசம் விவசாயிகள் பீதி

பழநி: ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தில் ஒற்றை யானை அட்டகாசம் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலனேதுமில்லை. பழநி வனச்சரக எல்லைகளில் உள்ள அணைகளில் நீர் நிரம்பி உள்ளன. இதனால் யானைகளின் பாதை தடைபட்டுள்ளது. இதன் காரணமாக சில யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதன்படி ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட பழநி அருகே கோம்பைபட்டியில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை அட்டகாசம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கோம்பைபட்டியை சேர்ந்த குணசேகர் என்பவரது மக்காச்சோள தோட்டம் மற்றும் பிரபு என்பவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தின. ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: