×

ஓசூரில் ரூ.32 கோடியில் புறநகர் பஸ் நிலையம்

ஓசூர், மார்ச் 6: ஓசூரில் ரூ.32 கோடி மதிப்பில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படுவதால் பொதுமக்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழகத்தின் மிக முக்கிய தொழில் நகரமாக ஓசூர் உள்ளது. நகராட்சியாக இருந்து தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ள ஓசூரில், குண்டூசி முதல் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டுமின்றி, சிறு,குறு தொழிற்சாலைகள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன.

 இந்த தொழிற்சாலைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒடிசா, அசாம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த லட்சகணக்கானோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர் மட்டுமின்றி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ரோஜா பூக்களும், அதிக அளவில் விளைகிறது.

இங்கிருந்து தான் சென்னைக்கு அதிக அளவில் காய்கறிகள், கீரைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. ‘தொழில் மட்டுமின்றி, விவசாய விளைபொருட்களும் அதிக அளவில் லாரிகள், பஸ்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. கர்நாடகா எல்லையில் உள்ள ஓசூர் நகருக்கு, தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்பவர்களும், ஓசூர் வழியாக தான் செல்கின்றனர். இதனால் எப்போதும் இந்த வழியாக செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம், அதிக அளவில் இருக்கும். இந்நிலையில், நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பஸ் நிலையம் போதிய வசதி இல்லாததால், பஸ்கள் வந்து செல்வதிலும், பயணிகள் வந்து செல்வதில் பெரும் சிரமம் உள்ளது. அவர்களின் சிரமத்தை போக்க, பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் வைத்த கோரிக்கையினை ஏற்று, தமிழக அரசு ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளி என்ற இடத்தில், அட்கோ காவல் நிலையம் அருகில், அரசுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் நிலத்தில் புதியதாக ரூ.32 கோடி மதிப்பீட்டில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து அந்த இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஓசூருக்கு தொழிற்சாலைகளில் பணிபுரிய தினமும் வரும் தொழிலாளர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் போதெல்லாம், ஓசூர் நகருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது உள்ள பஸ் நிலையமும், திமுக ஆட்சியின் போது தான் திறந்து வைக்கப்பட்டது. அதிக மக்கள் தொகை நெருக்கம் உள்ள ஓசூரில், பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள், போக்குவரத்திற்காக பஸ்களை தான் நம்பி உள்ளனர். ஆனால், பஸ்கள் நிற்பதற்கு போதிய இடவசதி, பஸ் நிலையத்தில் இல்லை என்பதால், புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, புதியதாக புறநகர் பஸ் நிலையம் அமைக்க 12 ஏக்கர் நிலமும், ரூ.32 கோடி நிதியும் ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்,’ என்றனர்.

Tags : 32 Crore Suburban Bus Station ,Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு