×

வாட்ஸ்அப், வீடியோ தகவல்களை ஆராயாமல் நம்ப வேண்டாம்

தர்மபுரி, மார்ச் 6: தர்மபுரியில் நடைபெற்ற வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில், வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள், வீடியோக்களை ஆராயாமல் நம்ப வேண்டாமென டிஎஸ்பி அறிவுறுத்தினார்.  தர்மபுரி மாவட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சத்தை போக்கும் வகையில், விழிப்புணர்வு கூட்டம் நேற்று ஒட்டப்பட்டியில் நடந்தது. தர்மபுரி டிஎஸ்பி நாகலிங்கம் தலைமை வகித்தார்.

இன்ஸ்பெக்டர்கள் தர்மபுரி ரங்கசாமி, அதியமான்கோட்டை நவாஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டிஎஸ்பி நாகலிங்கம் பேசுகையில், ‘தர்மபுரி மற்றும் அதியமான்கோட்டை காவல் எல்லைக்குள் உள்ள தொழிற்சாலைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். வடமாநில தொழிலாளர்களுக்கு காவல்துறை முழு பாதுகாப்பை அளிக்கும். வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள் மற்றும் வீடியோக்களை ஆராயாமல் நம்ப வேண்டாம். உங்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் வந்தால், உடனடியாக காவல் உதவி தொலைபேசியை அழைக்கலாம். 24 மணி நேரமும் காவல்துறையின் பாதுகாப்பு கிடைக்கும். உறுதி செய்யப்படாத தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம்.
அதன் உண்மைத் தன்மையை அறிய உடனுக்குடன் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்,’ என்றார்.

வடமாநில தொழிலாளர்கள் பேசுகையில், ‘எங்களுக்கு இதுவரை யாராலும் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை,’ என தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் செல்வம், சின்னசாமி, சங்கர், சிவக்குமார், பச்சியப்பன், சதாசிவம், சத்யாசுந்தரம், வையாபுரி, சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : WhatsApp ,
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...