×

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு நடவடுக்கை எடுக்க வேண்டும்

திருப்பூர், மார்ச் 6:வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்திகளை பரப்புகின்ற சமூகவிரோத சக்திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என திருப்பூரில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் எம்.பி. சுப்பராயன், எம்எல்ஏ செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் திமுக சார்பில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், மதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், இந்திய யூனியன் முஸ்லீக் சார்பில் மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைகுலைத்திட பிற்போக்கு சக்திகள் அரசியல் உள்நோக்கத்தோடு பல நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக சமீப சில மாதங்களாக புலம்பெயர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றி வருகின்ற வடமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தாக்குவதாக பொய்யான வதந்திகளை திட்டமிட்டே பரப்பி வருகின்றனர்.

வலைத்தளங்கள், முகநூல், வாட்சாப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக இத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் அச்சமும்‌ பீதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் திருப்பூரிலோ தமிழ்நாட்டின் பிற தொழில் நகரங்களிலோ வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எந்த இடத்திலும் எந்தவித மோதல்களும் நடைபெறவில்லை. ஆனால் மோதல்கள் நடைபெற்றதைப் போல வடமாநிலங்களில் நடைபெற்ற சில மோதல் சம்பவங்களை அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டில் நடந்ததைப்போன்று‌ திரித்து, சித்தரித்து பீகார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் போன்ற‌ சில வட மாநிலங்களில் பாஜவைச் சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநில மக்கள்‌ மத்தியில் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக திட்டமிட்டே இதுபோன்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது அடிப்படையே இல்லாத அரசியல் அவதூறு என்பதை தமிழ்நாட்டு அனுபவம்‌ நிரூபித்து வருகிறது. எனவே தொழிலாளர்களில் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துகிற வதந்திகளை பரப்புகின்ற சமூகவிரோத சக்திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் பிரச்னையை முன்வைத்து தமிழ்நாட்டிற்கு எதிரான பொய் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : North ,State ,
× RELATED தஞ்சாவூரில் பம்ப் செட் மூலம் கோடை நெல் சாகுபடி