ஏரியில் செத்து மிதந்த மீன்களால் மக்கள் அதிர்ச்சி அதிகாரிகள் ஆய்வுக்கு கோரிக்கை வேலூர் அருகே விஷம் கலப்பா?

வேலூர்: வேலூர் அடுத்த ஓட்டேரி ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் யாராவது விஷம் கலந்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளால் அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் அடுத்த ஓட்டேரியில் 106 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமார் 140 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இந்த ஏரி தண்ணீர்தான் ஒருகாலத்தில் வேலூர் மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. இந்த ஏரி நாயக்கநேரி கால்வாய், குளவிமேடு கால்வாய், மாந்தோப்பு கால்வாய், கணவாய்மேடு கால் வாய், பாலமதி மலை, ஓட்டேரி மலையில் இருந்து வரும் மழை நீரால் நிரம்பும்.

ஆனால் ஓட்டேரி ஏரிக்கான நீர்வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. இதை முறையாக பராமரிக்காததால் ஏரிக்கு நீர்வரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின் காரணமாக ஏரிக்கு குறைவான தண்ணீர் மட்டுமே வந்தது. அதுவும் கடந்த சில மாதங்களில் சில இடங்களில் மட்டும் குட்டை போல தண்ணீர் தேங்கியிருந்தது. தற்போது அதுவும் வறண்டுவிட்டது. இதற்கிடையில் ஏரியின் நடுப்பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மிகப்பெரிய உறைகிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் தற்போது பயன்பாட்டில் இல்லை. அந்த உறை கிணற்றில் மீன்கள் அதிகளவில் இருந்தது.

குறிப்பாக ஜிலேபி, கட்லா, கொரவை போன்ற மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த மீன்களை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பிடித்து செல்வார்கள். மேலும் சிலர் பிடித்து விற்பனையும் செய்வார்கள். இதேபோல் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் மீன் பிடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் அப்பகுதிைய சேர்ந்த சிலர் வந்து பார்த்தபோது ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மீன்கள் மூச்சுத்திணறலால் மேலே வந்து துடித்துக்கொண்டிருந்தது. விஷமிகள் யாராவது இரவில் விஷம் கலந்து விட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமாக மீன்கள் இறந்ததா என அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எனவே இறந்து கிடங்கும் மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் மாதிரியை எடுத்து உரிய ஆய்வு நடத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: