×

உடன்குடியில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் அனல்மின் நிலைய வடமாநில தொழிலாளர்கள் பாதிப்பு குறித்து அவசர எண்ணில் அழைக்கலாம் எஸ்பிபாலாஜி சரவணன் பேச்சு

உடன்குடி, மார்ச் 6:உடன்குடி அனல்மின்நிலையத்தில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் அனல்மின்நிலைய வளாகத்தில் நடந்தது.
உடன்குடி யூனியனுக்குட்ட குலசேகரன்பட்டினம் கல்லாமொழி பகுதியில்  சுமார் ரூ.10ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 660 மெகாவாட் திறன் கொண்ட 2அலகு அனல்மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் கட்டுமான பணியில் உ.பி, பீகார், அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 4000க்கும் மேற்பட்டவர்கள் குலசேகரன்பட்டினம், கல்லாமொழி, பதுவைநகர், திருச்செந்தூர், உடன்குடியையொட்டியுள்ள பகுதிகளில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வடஇந்தியர்களை தாக்குவது போன்று வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதனையடுத்து அனல் மின்நிலையத்தில் வேலை பார்க்கும் வடஇந்தியர்களிடம் இதுகுறித்து விளக்கமளிப்பதற்காகவும், அவர்களின்  பாதுகாப்பை உறுதி செய்யவும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், திருச்செந்தூர் ஆர்டிஓ புகாரி, தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது எஸ்பி பாலாஜி சரவணன் பேசுகையில், சமூக வலைத்தளத்தில் பரவிய வீடியோ போலியானது.

அதனை சமூக வலைதளத்தில் பரப்புபவர்கள் மீது வழக்கு பதிந்து 7ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அவசர உதவி எண் 04612320400 என்ற எண்ணில் அழைக்கலாம் என்றார். அப்போது கூட்டத்தில் வடமாநில தொழிலாளர் ஒருவர்,  நாங்கள் இங்கு பாதுகாப்பாக பணியாற்றி வருகிறோம். இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில்  அத்தியாவசிய பொருட்கள் வாங்க, தேவைகளுக்காக வெளியே சென்று வருவோம். அப்போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றார். அதற்கு எஸ்பி உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.

Tags : Saravanan ,North State ,
× RELATED சேரன்மகாதேவியில் வாலிபரை தாக்கியவர் கைது