×

ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் இழந்ததால் விரக்தி மெரினா கடலில் குதித்து தொழிலதிபர் தற்கொலை

சென்னை: ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் இழந்ததால் விரக்தியடைந்த தொழிலதிபர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலபேர் லட்சக்கணக்கான பணத்தை இழந்து  தற்கொலை செய்து கொள்கின்றனர்.தற்போது வரை 40க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் தான் தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டு வரப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்னும் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு பயன்பாட்டில் உள்ளது.

இதனால் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கே.கே.நகர் 14வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (47), தொழிலதிபர். ஜெராக்ஸ் இயந்திரத்திற்கான டோனர் மை மொத்தமாக சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தொழிலதிபர் சுரேஷ் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் முதலில் அவருக்கு அதிக வருமானம் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அதிகளவு பணத்தை இழந்துள்ளார். இதனை திரும்ப பெறும் நோக்கில், தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடியுள்ளார். இதில், ரூ.16 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் தொழில் நடத்த முடியாமல் கடந்த ஒரு வாரமாக வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளிடம் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டுவந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற சுரேஷ், வீடு திரும்பவில்லை. வெளியே சென்ற கணவன், வீட்டிற்கு வராததால் அவரது மனைவி ராதா செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மேலும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிறகு வீட்டில் சோதனை செய்த போது, சுரேஷ், தனது மனைவி ராதா மற்றும் 2 குழந்தைகளுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில், ‘ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சத்தை இழந்ததால், என்னால் கடனில் இருந்து மீளமுடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து தொழிலதிபர் சுரேஷ் மனைவி ராதா கே.ேக.நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் புகைப்படத்தை வைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு ஆண் சடலம் கிடந்தது. அதை மீட்டு போலீசார் விசாரித்தனர். அதில், ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சத்தை இழந்த சுரேஷ் என்பது தெரிந்தது. அதை தொடர்ந்து கே.கே.நகர் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Marina ,
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...