×

பல்லாவரம் கவுல் பஜார் சாலையில் அடையாறு ஆற்றின் கரையோரம் மலைபோல் குவித்து குப்பை எரிப்பு: கலெக்டர் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பல்லாவரம்: பல்லாவரம் அருகே கவுல் பஜார் செல்லும் சாலையில் அடையாறு ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பையை எரிப்பதால் சுற்றுப்புற வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சுவாசக்கோளாறு மற்றும் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட கலெக்டர் இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லாவரத்தில் இருந்து கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், போரூர் செல்வதற்கு கவுல்பஜார் வழியாக அடையாறு ஆற்றை கடந்து செல்லும் வழியே பிரதான சாலையாக உள்ளது. இந்த இடங்களுக்கு மெயின்ரோடு வழியாக சென்றால் அதிக தூரம் மற்றும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கக் கூடும் என்பதால், விவரம் அறிந்தவர்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை வழியாக பயணிப்பதால் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்வதுடன், காலம், நேரம், எரிபொருள் விரயமாவதும் தவிர்க்கப்படுகிறது. இதனால், கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள் வரை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருகின்றன. இப்படி வாகனப் போக்குவரத்திற்கு மிகவும் இன்றியமையாத இந்த சாலையின் அருமையை உணர்ந்த தமிழக அரசு, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கடந்தாண்டு பல கோடி செலவில் அடையாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துக் கொடுத்தது. இது வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.

இந்த சாலை வழியாக கொளப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது மற்றும் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வருவது போன்ற பணிகளில் பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர்.  அதேபோல் போரூர், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் அங்கு குடியிருந்து வரும் பகுதிவாசிகள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக தினமும் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் சமீப காலமாக கொளப்பாக்கம் மற்றும் கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை முறையாக தரம் பிரிக்காமல், அவற்றை தாறுமாறாக ஊராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.

அத்துடன் குப்பையை அப்படியே தீயிட்டு கொளுத்தி வருகிறது.  இதன் காரணமாக, காற்று மாசு ஏற்படுவதுடன், அதனை சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு, கண்ணெரிச்சல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் சாலையில் கொட்டப்படும் குப்பையை அப்பகுதியில் சுற்றித் திரியும் மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்தால், குப்பை எங்கும் சிதறி, திரும்பிய பக்கமெல்லாம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையெங்கும் கடும் துர்நாற்றம் வீசி, பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இங்கு நிலவும் சுகாதாரக்கேடு காரணமாக கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா, காலரா போன்ற கொடிய நோய்கள் பரவும் அச்சத்தில் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உடனடியாக தலையிட்டு, ஊராட்சி நிர்வாகம் அடையாறு ஆற்றின் கரையோரம் குப்பையை கொட்டி எரிப்பதுடன் சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pallavaram Kaul Bazar ,Adyar ,
× RELATED அடையாறில் அரசு ஒப்பந்தக்காரர்...