எடையூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் பயன்பாடற்ற கால்நடை மருந்தக கட்டிடத்தில் கிடந்த குப்பைகள் அகற்றம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் 2001ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவர் பக்கிரிசாமியால் கால்நடை மருத்துவக் கிளை நிலையம் கட்டி திறக்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுப்பகுதியில் கால்நடைகள் வளர்க்கும் மக்களுக்கு மிகவும் பயனாக இருந்தது. பின்னர் சில வருடங்களுக்கு முன்பு இந்த கால்நடை கிளை மருந்தகம் தரம் உயர்த்தப்பட்டு கால்நடை மருத்துவமனையாக மாறியதால் போதிய இட வசதி தேவைப்பட்டதால் சற்று தூரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் அருகே புதியதாக கட்டி திறக்கப்பட்டதால் இந்த கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் போனது.

இதனால் இந்த கட்டிடம் பொலிவு இழந்து தேவையற்ற பொருட்களை வைக்கும் இடமாக மாற்றினர். இதனால் தேவையற்றவர்கள் கூடும் ஒரு பகுதியாகவும் மேலும் சுற்று பகுதியில் உள்ள குடிமகன்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பாராக பயன்படுத்த துவங்கினர். இதனால் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து சுகாதார மற்ற ஒரு பகுதியாக உள்ளது என்றும் இதனை ஒட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் மற்றும் சுற்று பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் சம்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, பேருந்து நிலையம் போன்றவைகள் உள்ளதால் இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வந்து செல்லும் ஒரு பகுதியாக உள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தை சீரமைத்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அகற்ற வேண்டும். அதற்கு முன் இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகள் கழிவுகள் தேவையற்ற பொருட்களை உடன் அகற்ற வேண்டும் என சுட்டிக்காட்டி கடந்த மாதம் 27ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டு அப்பகுதி பளிச்சென்று மாறியது. மேலும் ஊராட்சி சார்பில் இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Related Stories: