வலங்கைமான்: குடவாசல் அடுத்த 39நெம்மேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 39- நெம்மேலியில் ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா, ஆண்டு விளையாட்டுவிழா, மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன் முன்னிலை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி தலைமை வகித்து சமுதாய பங்கேற்பினால் பள்ளியில் நிகழும் மாற்றங்களை குறித்தும் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு குறித்து வாழ்த்தி பேசினார்.
திருவாரூரை சேர்ந்த தொழிலதிபர் விஜயன் பள்ளிக்கு சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள உயர் தொழில்நுட்ப தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வழங்கினார், களப்பாளிருப்பை சார்ந்த தண்டபாணி சுமார் ரூ.50,000 மதிப்புள்ள இரண்டு கணினிகளை பள்ளி ஆய்வகத்திற்கு வழங்கினார், கடகம்பாடியை சார்ந்த தொழிலதிபர் குமரேசன் தொடக்கநிலை வகுப்புகள் பயன்பெறும் வகையில் சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள 55\” ஆண்ட்ராய்டு டிவி ஒன்றினை வழங்கினார், செதலபதி ஆதிவினாயகர் கோயில் சுவாமிநாத சிவாச்சாரியார் ஒரு வகுப்பறைக்கு சுமார் ரூ.35ஆயிரம் மதிப்புள்ள டைல்ஸ் வசதியுடன் கூடிய தரை தளத்தினை செய்துகொடுத்தார்.
பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சுமார் ஐம்பதாயிரம் மதிப்பில் இரண்டு வகுப்பறைக்கு தரைத்தளத்திற்கு டைல்ஸ் வசதி செய்யப்பட்டது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ. மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.