×

தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி, மார்ச் 5: தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலை வாய்ப்பு முகாமினை கனிமொழி எம்பி தொடங்கி வைத்து பேசுகையில், வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, பெங்களுர், கோயம்புத்தூர், திருப்பூர், ஓசூர், தூத்துக்குடி, திருநெல்வேலி என பல்வேறு பகுதிகளில் இருந்து 158 நிறுவனங்கள் பங்கேற்றன. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வழங்கக்கூடிய அளவில் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். மேலும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக 21 நிறுவனங்களும், புத்தாக்க தொழில்கள் தொடங்க வங்கிக்கடன் வாங்குவதற்காக வங்கியாளர்களும் வந்துள்ளனர்.

படித்துவிட்டு வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். வெளியூர்களில் வேலை என்பது புதிய உலகத்தை பார்ப்பதற்கு, புதிய இலக்குகளை அடைவதற்கு ஒரு வாய்ப்பு. மிகப்பெரிய தன்னம்பிக்கையை தரும். வாய்ப்பு கிடைப்பதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எங்கிருந்தாலும் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியோடு வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.

அமைச்சர் கீதா
ஜீவன் பேசுகையில், இந்த வேலைவாய்ப்பு முகாமானது இப்பகுதி மக்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். அரசு இளைஞர்களிடம் திறன்களை எதிர்பார்க்கிறது. எனவேதான் அரசு அனைத்து பகுதிகளிலும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகிறது. இளைஞர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பல இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு வந்திருக்கும் இளைஞர்கள் தங்கள் விரும்பிய வேலைதான் வேண்டும் என்று எதிர்பார்க்காமல் கிடைக்கும் வேலையில் சேர்ந்து பயனடையுங்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், சப் கலெக்டர் கவுரவ் குமார், தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மகாலட்சுமி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தூத்துக்குடி திட்ட இயக்குநர் மருத்துவர் வீரபுத்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள், மாவட்ட தொழில் மையம் மேலாளர் ஸ்வர்ணலதா, வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Thoothukudi ,Kanimozhi ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...