×

கருப்பந்துறை-மேலநத்தம் தாம்போதிக்கு விடிவு: ரூ.12.9 கோடியில் உயர்மட்ட பாலம் அமைகிறது

நெல்லை, மார்ச் 5:  நெல்லை கருப்பந்துறை-மேலநத்தம் இடையே அமைக்கப்பட்டுள்ள  தாம்போதி பாலத்தை அகற்றிவிட்டு ரூ.12.7 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மண் பரிசோதனை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நெல்லை கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றை கடப்பதற்காக குறுக்குத்துறை-மேலநத்தம் இடையே தாம்போதி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த தாழ்வான பாலம் பலவீனமாகி வருகிறது. மேலும்  மழைக்காலங்களில் அதிகளவு ஆற்றில் வெள்ளம் வரும்போது பாலம் மூழ்கிவிடுகிறது.

இதனால் போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. வெள்ளத்தின் போது அடித்து வரப்படும் மரத்தடி, மற்றும் மரம், செடி, கொடிகள், குப்பைகள் இந்த  பாலத்தின் தூண்களில் சிக்கி மேலும் பாலத்தின் தூண்களை பலவீனப்படுத்துகின்றன. பாலத்தின் அகலமும் குறைவாக உள்ளது. கனரக வானங்கள் கடந்து செல்லும் போது பாலத்தில் அதிர்வு, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. நெல்லை சந்திப்பு, டவுன் பகுதி மக்கள் மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளுக்கு செல்வதற்கு இப்பாலம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

இதனால் இரவிலும் இப்பாலத்தில் போக்குவரத்து நடைபெறுகிறது. எனவே இந்தப்பாலத்தை சீரமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் இப்பாலத்தை  உயர் மட்ட பாலமாக உயர்த்தி கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  ரூ.12.7 கோடி மதிப்பில் புதிய பாலம் உருவாக உள்ளது. தற்போது 7 மீட்டர்  மட்டுமே அகலமாக உள்ள இந்த பாலம் அகற்றிய பின்னர் 10 மீட்டர் அகலத்தில்  புதிய பாலம் அமைக்கப்படும். பாலம் தொடங்கும் இரு பகுதிகளிலும் சற்று  அகலப்படுத்தப்படும்.

இதற்காக இப்பகுதியில்  பெரிய அளவில் பாலம் அமைக்கும் போது உரிய பாதுகாப்பு வசதிகள் குறித்த மண் பரிசோதனை பணிகள் தொடங்கியுள்ளன. தூண்கள் அமைக்கப்படும் பகுதிகளில்  இருக்கும் பாறைகள், மண்ணின் தன்மைகள் உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு ஏற்ப தூண்கள் எந்த அளவு ஆழத்தில் உறுதியாக  அமைக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர உள்ளனர். இந்தப்பணி கடந்த சில தினங்களாக நடைபெறுகின்றன. அதை தொடர்ந்து அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அடுத்த 3  மாதங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karuppanthurai ,Melanantham Dhamphodi ,
× RELATED நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு