திருப்போரூர் கந்தசுவாமி கோயில் படவேட்டம்மன் கோயில் தெருவில் இன்று உற்சவர் வீதிஉலா: சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, படவேட்டம்மன் கோயில் தெருவில் இன்று உற்சவர் வீதி உலா நடைபெறும் என்று சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக உற்சவர் வீதி உலா பரிவேட்டை நடத்துவதற்காக ஆலத்தூர், தண்டலம் கிராமங்களுக்கு செல்வது வழக்கம். இந்த கிராமங்களுக்கு சென்று விட்டு திரும்பும்போது, திருப்போரூரில் உள்ள ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் தெருவிலும் வீதி உலா நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து, நான்கு முறை சமரச கூட்டம் நடைபெற்றும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அப்பகுதி மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ெதாடுக்கப்பட்டு, நீதிபதி சதீஷ்குமார் நடத்திய விசாரணையில், தலித் மக்கள் வசிக்கும் படவேட்டம்மன் கோயில் தெருவிலும் சுவாமி வீதிஉலா நடத்த வேண்டும் என்றும், அதற்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.  இதையடுத்து, நேற்று இதுகுறித்து ஆலோசனை மற்றும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. செங்கல்பட்டு கோட்டாட்சியர் (பொறுப்பு) சிராஜ்பாபு, மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இருதரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால் சுவாமி வீதி உலாவை எவ்வித பிரச்னையும் இன்றி நடத்திர இரு தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு இரு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், பரிவேட்டை நடத்துவதற்காக நேற்று மாலை உற்சவர் வீதிஉலா ஆலத்தூர் சென்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் திருப்போரூர் வந்தடையும். வரும்போது படவேட்டம்மன் கோயில் தெருவிலும் வீதிஉலா நடைபெறும் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்போரூர் வட்டாட்சியர் பொற்கொடி, கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: