பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் நாமக்கல் வந்தது

நாமக்கல், மார்ச் 5: தமிழகத்தில் பிளஸ் 2 அரசுபொதுத்தேர்வு வரும் 13ம் தேதி துவங்குவதையொட்டி, தேர்வுக்கான வினாத்தாள் வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 கட்டுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு வரும் 13ம் தேதியும், பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு வரும் 14ம் தேதியும் துவங்குகிறது. ஏப்ரல் 5ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வினை, 198 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்விற்கான முன்ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தேர்விற்கான விடைத்தாள் மற்றும் முகப்பு பக்கம் அனைத்து தேர்வு மையங்களுக்கும், கடந்த வாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. பள்ளிகளில் விடைத்தாளுடன், முகப்பு பக்கம் தைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அரசு பொதுத்தேர்வையொட்டி, பிளஸ் 1 பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு கடந்த 1ம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள 147 மையங்களில் நடந்து வருகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியியல், விலங்கியல், கம்யூட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், தொழிற்கல்வி, நர்சிங் போன்ற பாடங்களுக்கு நடைபெற்று வரும் செய்முறைத்தேர்வு வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது.

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்விற்கான வினாத்தாள் நேற்று மதியம் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது. வினாத்தாள் பண்டல்கள், தேர்வு மையம் வாரியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலையில் கல்வித்துறை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலையே அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், பள்ளி துணை ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மொத்தம் 9 இடங்களில் வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கண்காணிப்பு அலுவலர்களாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரும், ஒரு முதுகலை ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு 2 இடங்களில் வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சிக்கு செல்வது, நேற்று மாலை முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பள்ளியின் நுழைவு வாயிலில் நேற்று மாலை வைக்கப்பட்டது.

Related Stories: