ஜல்லிக்கட்டு போட்டியில் இருதரப்பினர் இடையே மோதல்

சேந்தமங்கலம், மார்ச் 5: சேந்தமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து 10 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். சேந்தமங்கலம் அடுத்த மாபிள்ளையார் தோட்டத்தில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் எருமப்பட்டியை சேர்ந்த செல்வா தரப்பினர், தங்களுக்கு சொந்தமான 2 காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொண்டு வந்தனர். அவர்கள் வாடிவாசலில் காளைகளை விட்டுவிட்டு, காளைகள் வெளியேறிய பிறகு, அதனை பிடிப்பதற்காக வெளிப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த மேதர்மாதேவி பகுதியை சேர்ந்த சிலருக்கும், எருமப்பட்டி தரப்பினருக்கும் இடையே மாடு பிடிப்பது தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். பின்னர் சரக்கு ஆட்டோவில் காளைகளை ஏற்றிக்கொண்டு அவர்கள் சேந்தமங்கலம் வழியாக எருமப்பட்டிக்கு சென்றனர். வடுகப்பட்டி புறவழிச்சாலையில் சென்ற போது, அங்கிருந்த மேதர்மாதேவியை சேர்ந்த 10 பேர் கும்பல், எருமப்பட்டி தரப்பினர் வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து, உருட்டு கட்டைகளால் அவர்களை சரமாரியாக தாக்கினர்.

இதில் சரக்கு வாகன கண்ணாடி உடைந்து, 3 பேர் படுகாயமடைந்தனர். பின்னர், அந்த கும்பல் தப்பியோடி விட்டது. படுகாயமடைந்த 3 பேரும் சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சேந்தமங்கலம் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 10பேர் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: