×

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரமோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசி பிரமோற்சவ விழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 7.30 மணியளவில் கோயிலில் இருந்து உற்சவர் சந்திரசேகரர் - திரிபுரசுந்தரி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினர்.

பின்னர் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு, காலை 8.45 மணியளவில் 41 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட தேர், சன்னதி தெருவிலுள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து கைலாய வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் பச்சைக்கொடி அசைக்க புறப்பட்டது. விழாவில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, வடசென்னை பா.ஜ. மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷங்களை எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சன்னதி தெருவில் இருந்து புறப்பட்ட தேர், திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்து, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக சென்று, மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சன்னதிதெரு வழியாக கோயிலை வந்தடைந்தது. தேருக்கு முன்னால் சங்கநாதம் முழங்க சிவனடியார்கள் நடனமாடியபடியும், பள்ளி மாணவிகள் கோலாட்டம், பரதநாட்டியம் ஆடியபடியும் சென்றனர். தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.

Tags : Masi Festival ,Tiruvottiyur Thyagaraja Swamy Vadudayamman Temple ,
× RELATED மங்கள காளியம்மன் கோயில் திருவிழா