கச்சத்தீவில் இந்திய-இலங்கை மீனவர்கள் ஆலோசனை

ராமேஸ்வரம், மார்ச் 5: கச்சத்தீவில் உள்ள இலங்கை கடற்படை முகாம் வளாகத்தில் நேற்று முன்தினம் இந்திய-இலங்கை மீன்பிடி தொழில் சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இலங்கை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை வகித்தார். இலங்கை கடற்படை வடக்கு பிராந்திய கமாண்டர் அருண தெண்ணக்கோ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இலங்கை வடபகுதி தமிழ் மீனவர்கள், தமிழக மீனவர்களிடையே மீன்பிடித் தொழிலில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், இலங்கை வடக்கு கடல் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க இலங்கை அரசு அனுமதி வழங்குவது குறித்தும் பேசப்பட்டது.

இதில் இலங்கை தரப்பில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு உட்பட பல்வேறு பகுகளை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இவர்கள் பேசுகையில், ‘தடை செய்யப்பட்ட இழுவைமடி படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது. எல்லை தாண்டியதாக கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கூடாது’ என்று தெரிவித்தனர். இந்திய மீனவர் பிரதிநிதிகள் சார்பில் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மனோகரன், தமிழக பாஜக மீனவர் அணி மாநில தலைவர் முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இவர்கள் பேசுகையில், ‘இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட இலங்கை மீனவர்கள் ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் இழுவைமடி படகுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டியதாக சிறைபடுத்தும் மிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து துன்புறுத்தக் கூடாது’ என்று கோரிக்கை விடுத்தனர். கச்சத்தீவிற்கு ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்க பிரதிநிதிகள் தாமதமாக வந்ததால், இந்த கூட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: