×

கொடைக்கானல் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது: 20 இடங்களில் நடக்கிறது

கொடைக்கானல், மார்ச் 5: கொடைக்கானல் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கி 20 இடங்களில் நடைபெறுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பறவை இனங்களை கணக்கெடுக்கும் பணிகள் நேற்று துவங்கியது. இதுபற்றி கொடைக்கானல் உதவி வன பாதுகாவலர் சக்திவேல் கூறியதாவது: கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. மேலும் கிரே ஹெட்டட் கென்னறி பிளே கேட்சிங், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்சிங், யுரேசியன் பிளாக் பேர், சுமிட்டர் வாபுலர், நீலகிரி ஃபிளை கேட்ச்சர், ஓரியண்டல் ஒயிட் ஐ, பழனி லாபிங் திரஸ், பார்விங் பிளை கேட்ச்சர், ஸ்டிக்கில்டு புளு பிளை கேட்ச்சர், ரஸ்டி டைல்டு பிளை கேட்சர் உள்ளிட்ட 25 அரிய வகை பறவை இனங்கள் உள்ளன.

இந்த பறவைகள் அனைத்தும் பழங்களை உண்ணாது, பூச்சிகளை மட்டுமே உண்டு வாழக்கூடியது ஆகும். மேலும் இம்மலை பகுதியில் நான்கு வகையான மரங்கொத்திகள் உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணிகள் இதுபோன்ற அரிய பறவை இனங்கள் பாதுகாக்கப்படுகின்றனவா, இனப்பெருக்கம் எந்த அளவில் உள்ளது, வெளிநாட்டு பறவைகள் வேறு ஏதேனும் வந்து உள்ளதா போன்ற ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. கொடைக்கானல் வனக்கோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகின்றன.

கொடைக்கானல் வனச்சரகத்தில் 4 இடங்களில் ரேஞ்சர் சிவக்குமார் தலைமையில் வனவர் அழகுராஜா மற்றும் பறவை ஆர்வலர்கள் சிறப்பு கேமராக்கள், பைனாகுலர்கள், ஒலி அறியும் கருவிகள் உள்ளிட்டவைகள் கொண்டு இந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2 நாட்கள் இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kodaikanal forest ,
× RELATED கொடைக்கானல் வனத்தில் காட்டுத்தீ