திண்டுக்கல், மார்ச் 5: திண்டுக்கல்லில் பூண்டு வியாபாரி கொலை வழக்கில் போலீசார் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகேயுள்ள வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 2ம் தேதி மதியம் இவர், தனது வீட்டின் அருகேயுள்ள சகோதரர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5க்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த சின்னத்தம்பியை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக இக்கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் கூறியதாவது: திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த அருள் குணசேவியர் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் அருள் குணசேவியரை, சின்னத்தம்பியின் சகோதரர் பரமசிவம் கொலை செய்தார்.
இந்த வழக்கில் கைதான பரமசிவம் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இக்கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் அருண் குணசேவியர் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து சின்னத்தம்பியை கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக அருள் குணசேவியரின் மனைவி லிடியா மேரி (25), மகேந்திரன் (28), ஆரோக்கிய ஜெரோம் (29) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான யுவராஜ், விக்னேஷ், செல்வி ஆகியோரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறினர்.