ரூ.6.80 கோடியில் சீரமைப்பு பணி நிறைவு திருச்சி காவிரி பாலம் இன்று திறப்பு: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்

திருச்சி: ரூ.6.80 கோடியில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து 5 மாதங்களுக்கு பிறகு திருச்சி காவிரி பாலத்தை இன்று அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக காவிரி பாலம் திகழ்கிறது. திருச்சி-ரங்கத்தை இணைக்கும் வகையில் 1976ம் ஆண்டு இப்பாலம் கட்டப்பட்டது. பழமையான காவிரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து பாலத்தில் விரிசல்கள் அதிகரித்தது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.5 கோடியில் பாலம் சீரமைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் பாலம் பழுதானது. தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, காவிரி பாலம் சீர்செய்யப்படும் என கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.

அதன்படி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த நிலையில் காவிரி பாலத்தை சீரமைக்க அரசு சார்பில் ரூ.6 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சீரமைப்பு பணிக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி முதல் பாலம் மூடப்பட்டது. எனினும் காவிரி பாலத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். கார் மற்றும் கனரக வாகனங்கள் பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டது. காவிரி பாலப்பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் சென்னை பைபாஸ் சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் பாலப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரி்க்கையை தொடர்ந்து பாலப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பாலப்பணிகள் துரிதப்பட்ட நிலையில், காவிரி பாலத்தில் உள்ள வாகன அதிர்வு தாங்கிகளான 192 பேரிங், தூண்களுக்கிடையே உள்ள 32 ஸ்டிரிப்ஸ்டில்கள், மேல் பகுதியில் உள்ள கான்கிரிட் கம்பிகள் புதிதாக மாற்றப்பட்டது. இருபுறமும் நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு, டைல்ஸ்கற்கள் பதிக்கப்பட்டு, பால தடுப்பு கட்டைகளில் வர்ணம் பூசும் பணி, சீரமைப்பு பணிகள் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கேசவன், புகழேந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தலைமையில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்தது.

இப்பணிகள் முடிந்ததையடுத்து, காவிரி பாலம் இன்று (4ம் தேதி) காலை திறக்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைக்கிறார்.  இதுகுறித்து மேயர் அன்பழகன் கூறுகையில், காவிரி பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. நாளை (இன்று) அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். இதையடுத்து பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார். மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி புகழேந்தி கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி பாலம் சீரமைக்கப்பட்டபோது சாலை மட்டுமே சீரமைக்கப்பட்டது. பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள வாகன அதிர்வலைகள் தாங்கும் பேரிங்குகள் மாற்றப்படவில்லை. அதனால் அதிர்வு நீடித்து வந்தது. தற்போது அனைத்தும் மாற்றப்பட்டுள்ளதால் இன்னும் 25 ஆண்டுகள் பாலம் உறுதியாக இருக்கும். பிரச்னை ஏற்பட வாய்பில்லை. 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை பேரிங்குகளை சீர் செய்து கொள்வதால் பாலத்தின் ஸ்திரத்தன்மை நீடிக்கும் என்றார்.

Related Stories: