×

திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் பழைய கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும்

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தீயாடியப்பர் பஸ் நிலையத்தில் பழமையான கட்டடத்தை இடித்து அப்புறப் படுத்துமாறு திடீர் ஆய்வு மேற்கொண்ட தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் தீயாடியப்பர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான கட்டடத்தை மக்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக இடித்து அப்புறப்படுத்துமாறு கூறினார்.

மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள இடங்களில் கடைகள் அமைத்துள்ளதை கண்டித்து, அவைகளை உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறு கடை வைத்துள்ளவர்களிடம் தெரிவித்து, இதனை கண்காணிக்க பேரூராட்சி செயல் அலுவலருக்கும் உத்தரவிட்டார். பேருந்து நிலைய மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேவையற்ற மரங்களையும் அகற்றவும், கழிவறைகளை நவீனமாக ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து கட்டுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பேரூராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் வளாகத்தில் ரூ. 2.8 கோடியில் நடைபெறும் புதிய கட்டட பணிகளை ஆய்வு செய்து பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்று பொறியாளர்களை எச்சரித்தார்.

ஆய்வின் போது தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், வார்டு உறுப்பினர்கள் திருஞானசம்பந்தம், பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சிவசங்கரன், விஏஓ ஹரிஷ், நகர திமுக செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Thirukkatupalli bus station ,
× RELATED தூத்துக்குடியில் முதியவரிடம் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது