×

பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது சட்டத்தின் மூலம் மீண்டும் பெறுவதற்கு சட்டப்பணிகள் குழு உறுதுணையாக இருக்கும்: நீதிபதி லதா பேச்சு

ஜெயங்கொண்டம்: பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது, சட்டத்தின் மூலம் அதை மீண்டும் பெறுவதற்கு, சட்டப்பணிகள் குழு எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று சட்ட விழிப்புணர்வு முகாமில் அரியலூர் சார்பு நீதிபதி லதா பேசினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அரியலூர், ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இணைந்து \”சட்ட விழிப்புணர்வு மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான லதா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜசேகரன் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அன்புமொழி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அரியலூர் மாவட்ட காவல் அலுவலக சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான பகுத்தறிவாளன், வாரியங்காவலைச் சேர்ந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான பரமேஸ்வரி, வழக்கறிஞர்கள் அல்லி மற்றும் கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் சட்டப்பணிகள் குழுவின் திட்டங்கள் அடங்கிய நூலை வெளியிட்டு, சார்பு நீதிபதியுமான லதா தலைமை உரையாற்றுகையில், \”பெண்கள் தொடர்பான பல்வேறு சட்டங்கள் வழங்கும் உரிமைகள் மற்றும் தீர்வுகள் குறித்த நடைமுறை அறிவை வழங்கி நிஜவாழ்வின் சவால்களை பெண்கள் எதிர்கொள்ள செய்வதே \”சட்ட விழிப்புணர்வின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்\” எனும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது, சட்டத்தின் மூலம் அதை மீண்டும் பெறுவதற்கு, சட்டப்பணிகள் குழு எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் நீங்கள் தெரிந்து கொண்ட சட்டங்களைப் பற்றி மற்ற பெண்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், உங்களுக்கு சட்டப்பணிகள் செய்வது எங்கள் கடமை\” என்று கூறினார். இந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் லெபர்ன் வசந்தஹாசன் செய்திருந்தார்.

Tags : Legislative Committee ,Latha ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் வாள்வீச்சு...