×

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமகத் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

வேதாரண்யம்: வேதாரண்யம் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசி மகத் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில், மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடைய பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்து, மூடிக்கிடந்த கோயில் திருக்கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி திறந்த வரலாற்று சிறப்புடைய வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமகத் திருவிழா கடந்த மாதம் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய தியாகராஜ சுவாமி திருத்தேரினை யாழ்பானம் வரணி ஆதினம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி நகராட்சி கமிஷனர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், குருகுலம் நிர்வாகிகள், வேதரத்தினம், கேடிலியப்பன், செயல் அலுவலர் அறிவழகன் உள்பட பலர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அதனை தொடர்ந்து நான்கு மாட வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தியாகேசா..., மறைகாடா.. என பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வேதாரண்யேஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Tags : Vedaranyam ,Vedaranyeswarar Temple ,Masimaghat Therotam ,
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...