×

கும்பகோணத்தில் வங்கி பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம் சாகும் வரை ஆயுள் தண்டனையை எதிர்த்த 4 பேர் மனுக்கள் தள்ளுபடி

மதுரை: டெல்லியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கும்பகோணம் வங்கி பணிக்கு தேர்வானார். பணியில் சேர்வதற்காக 1.12.2018ல் சென்னையில் இருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் மூலம் கும்பகோணம் சென்றார். இரவு 11 மணியானதால் ஓட்டலில் தங்குவதற்காக அங்கிருந்த ஆட்டோவில் ஏறி சென்றார். பாதி வழியில் அந்தப் பெண்ணை ஆட்டோ டிரைவர் இறக்கி விட்டுள்ளார். சாலையில் நடந்து சென்ற அந்தப் பெண்ணை அவ்வழியாக டூவீலரில் வந்த வசந்தகுமார், தினேஷ் குமார் ஆகியோர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் தங்களது நண்பர்கள் புருஷோத்தமன், அன்பரசு ஆகியோரையும் வரவழைத்து பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர். இதை செல்போனில் படம் எடுத்து மிரட்டியுள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணை மீன் மார்க்கெட் பகுதியில் கொண்டு விட்டுச் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் தினேஷ்குமார் (30), வசந்தகுமார் (27), புருஷோத்தமன் (26), அன்பரசு (23) மற்றும் ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி (31) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. போலீசார் தரப்பில் 700 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவில் கடந்த 13.1.2020ல் தீர்ப்பளித்த மகளிர் நீதிமன்றம் தினேஷ்குமார், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய 4 பேரும் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அனைவரும் தனித்தனியே ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, ‘‘விசாரணை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் 33 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். கொடூரமான முறையில் 4 பேரும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். 18 விதமான தடயங்கள் மனுதாரர்களுக்கு எதிராக உள்ளது. டிஎன்ஏ பரிசோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்போனில் அவர்கள் எடுத்த வீடியோ ஆதாரமே போதுமானது. இதையெல்லாம் ஆராய்ந்தே விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை’’ என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘தினேஷ்குமார், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய 4 பேரும் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. எனவே, இவர்களது அப்பீல் மனு தள்ளுபடி ெசய்யப்படுகிறது. ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி தீவிரமான குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனை 3 ஆண்டாக குறைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Kumbakonam ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்