(வேலூர்) கைலாயநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடராஜருக்கு திருக்கல்யாணம் நடந்தது 2 ஆயிரம் ஆண்டு பழமையான

ஒடுகத்தூர், மார்ச் 4: ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாயநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் ஒடுகத்தூர் பாக்கம் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 2 ஆயிரம் ஆண்டு பழமையான கைலாயநாதர் திருக்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தான் புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் முன் பிரமாண்ட பந்தல் அமைத்து 6 கால பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டது.

மேலும், இங்கு அமையபெற்றுள்ள நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விமான கலசத்திற்க்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், அங்கிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடராஜருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 1008 சுமங்கலிகளுக்கு சீர் வரிசையாக புடவை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 11 பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: