×

கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்வது குறித்து கலெக்டர் ஆய்வு

கோவில்பட்டி, மார்ச் 4: கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். கோவில்பட்டி புறவழிச்சாலையில் கடந்த 2007-ம் ஆண்டு புதிய கூடுதல் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியது. ஆனால், பொதுமக்களின் வரவேற்பு இல்லாததால் பேருந்து நிலையம் முடங்கியது. ஆனால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பைபாஸ் ரைடர் பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டும் புதிய கூடுதல் பேருந்து நிலையம் முன்புள்ள அணுகு சாலை வழியாக வந்து செல்கின்றன. இதில், அதிகாலை நேரத்தில் மதுரை மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள், அணுகு சாலைக்கு கூட வராமல் நான்குவழிச்சாலையிலேயே நின்று பயணிகளை இறக்கி விட்டு சென்றன. இதனால் விபத்துகள் தொடர்ந்து நடந்தன.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மதுரையில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பைபாஸ் ரைடர் பேருந்து, கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையம் முன்புள்ள நான்குவழிச்சாலையில் நின்று பயணிகளை இறக்கிச் சென்றது. இதில் இருந்து இறங்கி வந்த கிருஷ்ணப்ரியா என்ற அரசு ஊழியர் நான்குவழிச்சாலையை கடந்தபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைதொடர்ந்து அனைத்து பேருந்துகளும் புதிய கூடுதல் பேருந்து நிலையத்துக்குள் சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், நேற்று கோவில்பட்டி வந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், புதிய கூடுதல் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் சென்று வருவது குறித்து ஆய்வு செய்தார். மேலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன், கோட்டாட்சியர் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முன்னதாக இனாம் மணியாச்சி விலக்கு, இளையரசனேந்தல் சாலை விலக்கு பகுதிகளிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வட்டாட்சியர் சுசிலா, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Kovilpatti New Bus Station ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு